என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2017-02-17 20:30 GMT
நெய்வேலி,

தீ விபத்து 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து அந்த நிலக்கரி மூலம் அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. என்.எல்.சி. சுரங்கம்–1 ‘ஏ’ பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, சேமிப்பு கிடங்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் கடந்த 14–ந் தேதி திடீரென தீப்பற்றியது.

இந்த தீ நிலக்கரி கிடங்கு முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகையால் சுரங்க பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

பல கோடி ரூபாய் சேதம் 

தொடர்ந்து நேற்று 4–வது நாளாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், ஊழியர்களும் டேங்கர் லாரி மூலமும், அதிக திறன் கொண்ட நீர் தெளிப்பான்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையில் என்.எல்.சி. தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சுரங்கத்துறை செயல் இயக்குனரை சந்தித்து, நிலக்கரி தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த பயங்கர தீ விபத்தில் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்