சென்னை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு: மத்திய மந்திரிகளுக்கு, கனிமொழி எம்.பி. கடிதம்

சென்னை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவு சம்பவத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-02-01 21:33 GMT

சென்னை,

கனிமொழி எம்.பி. கடிதம்

இதுகுறித்து மத்திய வேளாண்துறை மந்திரி ராதாமோகன்சிங், சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி அனில் மாதவ் தவே, கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கனிமொழி எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தில் கடந்த ஜனவரி 29–ந் தேதியன்று கப்பல்கள் மோதிக்கொண்டதால் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகரின் 24 கிலோ மீட்டர் கடலோரப் பகுதி முற்றிலும் மாசுபட்டு இருக்கிறது.

கடல்வாழ் உயிரினங்களான ஆமைகளும், மீன்களும் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டு செத்து கரை ஒதுங்குகின்றன. இதனால் கடலோர சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடலோர பகுதிகளில் வசிக்கக்கூடிய மீனவர்களின் அன்றாட பிழைப்பு, அவர்களது சுகாதாரம், பாதுகாப்பு பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.

உரிய நிவாரணம்

இந்த எண்ணெய் கசிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் கடலோர காவல்படை ஈடுபட வேண்டுமா? அல்லது துறைமுக பொறுப்புக்கழகம் ஈடுபட வேண்டுமா? என்று அவர்களுக்கு இடையிலேயே குழப்பம் நிலவுகிறது. எண்ணெய் கசிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் பிரத்யேக திறமை வாய்ந்த அதிகாரிகளோ, நவீன உபகரணங்களோ பயன்படுத்தப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், பகுதிவாசிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் தங்களால் முடிந்த அளவு தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். மீனவர்கள் நலனை உள்ளடக்கிய மத்திய வேளாண்துறை இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கண்காணிப்பு குழு

மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை கப்பல்கள் மோதிக்கொண்டதற்கான பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். இதன் மூலம் மீண்டும் ஒரு முறை இதுபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்காத அளவுக்கு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மேலும் இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதோடு, தூய்மைப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தை வலியுறுத்திட வேண்டும். இதுபற்றி மத்திய சுற்றுச்சூழல் துறை தன்னார்வலர்கள், மீனவர் சங்கத்தலைவர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்  இவ்வாறு அந்த கடிதத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்