ஜல்லிக்கட்டுக்காக 3-ந் தேதி நடக்கும் தி.மு.க போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் - திருநாவுக்கரசர்

ஜல்லிக்கட்டுக்காக 3-ந் தேதி நடக்கும் தி.மு.க போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என திருநாவுக்கரசர் கூறிஉள்ளார்.

Update: 2017-01-01 08:46 GMT


சென்னை,  

ஜல்லிக்கட்டுக்காக 3-ந் தேதி நடக்கும் தி.மு.க போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என திருநாவுக்கரசர் கூறிஉள்ளார். 

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை வரும் ஆண்டிலும் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய துரோகத்தை மத்திய அரசின் துணையோடு தமிழக பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். இச்செயலை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 11.07.2011-ல் வெளியிட்ட  அறிவிக்கைதான் காரணம் என்று மத்திய பா.ஜ.க அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் மே 7, 2014 அன்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜல்லிகட்டு நடத்த வெறும் அறிவிக்கை வெளியிடாமல் மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால், தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகப் பெரிய வாய்பாக அமைந்திருக்கும். 

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வருகிற தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதை கண்டிக்கிற வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உரிய நடவடிக்கைளை எடுக்க கூறியும் வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு அலங்காநல்லூரியில் சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்