கண்களை கவர்ந்த வாண வேடிக்கைகளுடன் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனை

புதுச்சேரி கடற்கரையில் வாண வேடிக்கைகளுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. நள்ளிரவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2017 ஆ;

Update: 2016-12-31 23:45 GMT
புதுச்சேரி கடற்கரையில் வாண வேடிக்கைகளுடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. நள்ளிரவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன.

புத்தாண்டு கொண்டாட்டம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2017 ஆங்கில புத்தாண்டு தினம். இதையொட்டி நேற்று இரவு புதுவை கடற்கரையில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து இருந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், இளைஞர் பட்டாளங்கள் என குவிந்தனர். இதனால் கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நள்ளிரவு 12 மணி ஆனதும் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அனைத்து பகுதிகளிலும் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் ஒலித்தது. பட்டாசுகள் வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். சிலர் ‘கேக்’ மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். வண்ண பலூன்களை பறக்க விட்டு மகிழ்ந்தனர். புதுவை சுற்றுலாத்துறை சார்பில் கண்கவர் வாண வேடிக்கை நடைபெற்றது.

போலீஸ் தடியடி

புதுவை கடற்கரையில் நேற்று இரவு முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் வாலிபர்கள் சிலர் குடிபோதையில் அத்துமீறி நடந்தனர். இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து அத்துமீறியதால் லேசான தடியடி நடத்தி அவர்களை போலீசார் கலைத்தனர்.

தேவாலயங்களில் பிரார்த்தனை

புத்தாண்டு பிறப்பையொட்டி புதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் இரவு 11.30 மணிக்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகள் செய்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் ஆலய வளாகத்தில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, அரியாங்குப்பம் மாதா கோவில், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம், புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தூயயோவான் தேவாலயம், கோரிமேடு பாத்திமா தேவாலயம், வில்லியனூர் மாதா கோவில் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தங்கும் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சி

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறைகள் நிரம்பி வழிந்தன. நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பிரபல ஓட்டல்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு ஆடிப்பாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள முன் அனுமதி பெற்ற மது கடைகள் நள்ளிரவு 1 மணி வரையில் திறந்து இருந்தன. இதனால் மதுக்கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்