ராமமோகன ராவ் மகனிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டம்
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மகன் விவேக்கை, வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு மீண்டும் அழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை,
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மகன் விவேக்கை, வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு மீண்டும் அழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
விசாரணைக்கு ஆஜர்
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 21–ந் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக விவேக் மற்றும் அவருடைய நண்பர் வக்கீல் அமலநாதன் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இதனை ஏற்று வக்கீல் அமலநாதன், சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விவேக் கடந்த 30–ந் தேதி நேரில் ஆஜராவதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருந்தார். அதன்படி விசாரணை அதிகாரிகள் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் விவேக் ஆஜரானார்.
மீண்டும் விசாரணை
அவரிடம் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 85 கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து 5½ மணி நேரம் நடந்த விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விவேக் அளித்த ஆதாரங்கள் மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை நேற்று ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு சில சந்தேகங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் உள்ள வருமான வரித்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் விவேக்கை மீண்டும் ஒரு முறை அழைத்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.