தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,480 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படுவது எப்போது?
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழகத்தில் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்து 480 டாஸ்மாக் கடைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த கடைகளுக்கான மாற்று இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழகத்தில் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரத்து 480 டாஸ்மாக் கடைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த கடைகளுக்கான மாற்று இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மதுக்கடைகள் இருப்பதால் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் இந்த கடைகளை அகற்ற அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரையிலும் எந்த கடைகளும் இருக்கக்கூடாது, இந்த சாலைகளில் இருந்து பார்த்தால் கடைகள் தெரியக்கூடாது, மது தொடர்பான விளம்பர போர்டுகளும் இருக்கக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3,480 டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சுமார் 6 ஆயிரம் உள்ளன. இதில் எத்தனை கடைகள் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன? எந்தெந்த ஊர்களில் உள்ளன? என்பதற்கான ஆய்வு அனைத்து மாவட்டத்திலும் முடுக்கி விடப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 480 டாஸ்மாக் கடைகள் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த 3 ஆயிரத்து 480 கடைகளையும் உடனடியாக அகற்றி வருகிற மார்ச் மாதத்துக்குள் மாற்று இடங்களில் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்பட உள்ள இந்த கடைகளுக்கான மாற்று இடம் கிடைப்பது அரிது என்றே அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால் ஊர்களுக்குள்ளும், மக்கள் கூடும் இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் வைக்க யாரும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதால் இந்த பணி நிச்சயம் கடினமாக அமையும் என்றே கருதப்படுகிறது.
மாற்று இடம் தேர்வில் அதிகாரிகள்
எனவே பல டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்படும் நிலைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதின் விளைவாக, அதில் உள்ள 3 ஆயிரத்து 400 பணியாளர்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் தமிழ்நாடு அரசு வாணிப கழகத்துக்கு நிதிச்சுமை தான் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் தேசிய–மாநில நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தகுந்த இடம் கிடைக்கவில்லை என்றால், அந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலையில்லா சம்பளம் வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே கூடுதல் நிதிச்சுமையை தடுக்கும் நோக்கில் இந்த வேலையை முடிப்பது சிக்கலான ஒன்று என்றே கருதப்படுகிறது. எனினும் மாற்று இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.