ரெயிலில் வந்த 2 ஆயிரம் டன் உரம்

திண்டுக்கல், தேனி உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் 2 ஆயிரம் டன் உரங்கள் வந்தன.

Update: 2022-11-30 16:18 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக செய்தது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். எனவே விவசாயத்துக்கு தேவையான உரம் மாவட்டம் வாரியாக இருப்பு வைக்கப்படுகிறது. இதற்காக தூத்துக்குடி, சென்னையில் இருந்து உரம் ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் உரம் வந்தது.

இந்த ரெயிலில் 1,316 டன் யூரியா, 441 டன் பொட்டாஷ், 184 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,941 டன் உரம் வந்தது. இதில் 1,316 டன் யூரியா, 125 டன் காம்ப்ளக்ஸ், 248 டன் பொட்டாஷ் திண்டுக்கல் மாவட்டத்துக்கும், 59 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 168 டன் பொட்டாஷ் தேனி மாவட்டத்துக்கும், 25 டன் பொட்டாஷ் மதுரை மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து லாரிகள் மூலம் உர மூட்டைகள் ஏற்றி செல்லப்பட்டன.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 3,302 டன் யூரியா, 1,146 டன் டி.ஏ.பி., 5,093 டன் காம்ப்ளக்ஸ், 1,269 டன் பொட்டாஷ், 723 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும். இந்த உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ, உரம் இருப்பு இல்லை என்று கூறினாலோ விவசாயிகள் 94420 60637 எனும் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று இணை இயக்குனர் அனுசுயா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்