தீபாவளி பண்டிகைக்கு 200 சிறப்பு பஸ்கள்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2022-10-20 18:45 GMT

தீபாவளி பண்டிகை


தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு செல்கின்றனர். அதேபோல் வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தீபாவளியை கொண்டாடவும் மக்கள் செல்வது வழக்கம். மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 2 விடுமுறை நாட்கள் வருகின்றன.


எனவே தீபாவளி கொண்டாட்டத்துக்கு மக்கள் முன்கூட்டியே வெளியூருக்கு செல்ல தொடங்கிவிட்டனர். அதேநேரம் வெளியூர் பயணம் என்றாலே ரெயில், பஸ்களில் தான் மக்கள் அதிகம் செல்கின்றனர். ஆனால் ரெயில்களிலும் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதனால் கடைசி நேரத்தில் செல்வோர் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் நிலை உள்ளது.


200 சிறப்பு பஸ்கள்


எனவே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுதவிர திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஆன்மிக நகரான பழனி, சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள். எனவே அந்த ஊர்களுக்கும் வழக்கத்தைவிட கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.


இதன்மூலம் மொத்தம் 200 அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 26-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்க முக்கிய பஸ்நிலையங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்