ரூ.11.65 லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் கடத்த முயன்ற 200 பேர் கைது
ரூ.11.65 லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் கடத்த முயன்ற 200 பேர் கைது.
சென்னை,
ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த டிசம்பர் 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 11 லட்சத்து 65 ஆயிரத்து 555 ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 991 குவிண்டால் பொது வினியோகத்திட்ட அரிசி மற்றும் 146 லிட்டர் மண்எண்ணெய், 43 சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 59 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.