200 கிலோ கடல் அட்டை பறிமுதல்; 2 பேர் கைது

வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-10 18:45 GMT

வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடல் அட்டை

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பகுதியில், அரிய வகை கடல் உயிரினங்களில் ஒன்றான கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் ஆலோசனையின் பேரில் வனவர் ராஜேஷ் குமார், வனக்காப்பாளர்கள் கார்த்திக் ராஜா, பாலமுருகன் உள்ளிட்டோர் தேவிபட்டினம் பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் தேவிபட்டினம் வடக்குத்தெரு பகுதியில் ஒரு வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 30 கிலோ அளவுக்கு பதப்படுத்தி அவித்த கடல் அட்டைகளையும், 170 கிலோ அளவுக்கு பதப்படுத்தாத கடல் அட்டைகளும் இருந்தன.

2 பேர் கைது

இதுதொடர்பாக தேவிபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்த ஷேக்தாவுது மகன் சீனி இப்ராஹிம் (வயது 37) மற்றும் சலீம் என்பவரின் மகன் சேகுமஸ்தான் (31) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் 2 பேரும் கடல் அட்டையை தங்களின் படகுகளில் சென்று சேகரித்து வந்து அவித்து பதப்படுத்தி, இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

பறிமுதல் செய்த 200 கிலோ கடல் அட்டை மற்றும் அவற்றை அவிக்க பயன்படுத்திய கியாஸ் அடுப்பு, சிலிண்டர், பாத்திரம் போன்றவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். அந்த பொருட்களுடன் 2 பேரையும் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்