லாரியில் கொண்டு வரப்பட்ட 20 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் புதுக்கோட்டைக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட 20 டன் நெல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-12 18:22 GMT

நெல் கொள்முதல் நிலையங்கள்

தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்காக அரசு தரப்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவும், வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை வியாபாரிகள், ஏஜெண்டுகள் கொண்டு வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் உரிய ஆவணம் இல்லாமல் நெல் மூட்டைகளை லாரி போன்ற வாகனங்களில் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. சரவணன் ஆகியோர் உத்தரவுப்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையில் ஏட்டு தேவதயவு மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் மூட்டைகள் பறிமுதல்

இந்த நிலையில் நேற்று  இரவு புதுக்கோட்டை அருகே வம்பன் நால் ரோடு பகுதியில் போலீசார் ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அந்த லாரியில் 20 டன் நெல் மூட்டைகள் இருந்தது. அதனை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆலங்குடியில் உள்ள ஒரு அரவை மில் ஏஜெண்டிடம் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.

இதனால் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சந்தேகமடைந்தனர். லாரியின் டிரைவரான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ்காந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாரியுடன் நெல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அழியா நிலை கிடங்கில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

அதனைதொடர்ந்து நெல் மூட்டைகளை அனுப்பியவரின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரித்தனர். இதில் நெல் மூட்டைகளை அனுப்ப வரி செலுத்தியது மற்றும் உரிய ஆவணம் இருப்பதாகவும், அரவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னர் லாரி விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்