போலீஸ் என்று கூறி பருத்தி வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு

போலீஸ் என்று கூறி பருத்தி வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2023-05-08 19:39 GMT

வேப்பந்தட்டை:

மொபட்டை வழிமறித்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தாண்டவர் கோவில் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47). பருத்தி வியாபாரி. இவர் நேற்று மதியம் மொபட்டில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், தன்னை போலீஸ் என்று கூறி ஜெயக்குமாரின் மொபட்டை வழிமறித்து நிறுத்தினார்.

பின்னர் அவர் ஜெயக்குமாரிடம் மொபட்டின் ஆர்.சி. புத்தகம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை எடுத்து காண்பிக்குமாறு கேட்டதோடு, சட்டை பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை செய்வது போல், சட்டை பையில் இருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்து கொண்டார். மேலும் ஜெயக்குமாரிடம் அவர், பணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்து பெற்று செல்லுமாறு கூறி தப்பிச்சென்றார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

பணத்தை பறித்துச்சென்ற நபர் சந்தன நிற சட்டையும், காக்கி பேண்ட்டும் அணிந்திருந்ததாக ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ் என்று கூறி பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓட்டுனர் உரிமம் கேட்டார்

இதேபோல் சேலம் மாவட்டம், அரிசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரகுமார்(38). இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பூஞ்சோலை கிராமத்தில் உள்ள தனது உறவினர் விஜயராகவன் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் ஒரு மொபட்டில் வேப்பந்தட்டையில் இருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வேப்பந்தட்டை அரசு கல்லூரி அருகே சென்றபோது மர்ம நபர் ஒருவர் நாகேந்திரகுமார் ஓட்டி வந்த மொபட்டை வழிமறித்தார். மேலும் அவர்களிடம், தான் போலீஸ் என்று கூறிய அந்த நபர், உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தை காட்டுங்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து நாகேந்திரகுமார் தான் வைத்திருந்த பர்சை வெளியே எடுத்துள்ளார்.

போலீசார் விசாரணை

அப்போது அந்த மர்ம நபர் திடீரென அந்த பர்சை பறித்துக் கொண்டு, பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். அந்த பர்சில் ரூ.8 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசில் நாகேந்திரகுமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் என்று கூறி பணம் இருந்த பர்சை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்