கேரளாவில் இருந்து குமரிக்கு மீன் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து குமரிக்கு மீன் கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தக்கலை:
கேரள மாநிலம் கொல்லம், காயம்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் நேற்று இரவு தக்கலை அருகே வந்தது. அப்போது அந்த லாரிகளில் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்ட பொதுமக்கள் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 லாரிகளையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது மீன் கழிவுகளை கூடங்குளத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் இதற்கான முறையான அனுமதி இல்லை. இதனால் அவர்கள் குமரியில் வேறு எங்கேயாவது கழிவுகளை கொட்டி செல்லலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
பின்னர் இதுகுறித்து பத்மநாபபுரம் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நகராட்சி ஆணையர் லெனின் விரைந்து வந்து 2 லாரிகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அந்த 2 லாரிகளையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.