பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறிப்பு
ஆவுடையார்கோவில் அருகே பெண்ணிடம் 20 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்க சங்கிலி பறிப்பு
ஆவுடையார்கோவில் அருகே கிடங்கிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 40). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 3 மர்ம ஆசாமிகள் வீ்ட்டிற்குள் புகுந்து அவர் கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.
இதையடுத்து கண்விழித்த ஆறுமுகம் மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது ஆறுமுகமும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் ஆகியோர் தப்பியோடிய மர்ம ஆசாமிகளை விரட்டி பிடித்தனர்.
வாலிபர்கள் 3 பேர் கைது
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மனோஜ்பட்டியை சேர்ந்த ரவி மகன் பிரபாகரன் (30), ராமசாமி மகன் ரமேஷ் (33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம ஆசாமிகளிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.