அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

கலை, அறிவியல் படிப்பில் சேர அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் அரசு கல்லூரிகளுக்கு 20 சதவீதம் வரை கூடுதல் கல்வி இடங்கள் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2023-06-22 21:19 GMT

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ-மாணவிகளிடம் பெறப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இவற்றில் இதுவரை 77 ஆயிரத்து 984 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை வரும் 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் வந்துள்ளன. எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. அரசு கல்லூரிகளுக்கு 20 சதவீதமும், அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளுக்கு 10 சதவீதமும் கூடுதல் இடங்கள் வழங்கப்படும்.

இடஒதுக்கீடு

வரும் ஜூலை மாதம் 3-ந்தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. கல்லூரிகள் திறந்த பிறகும் காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கை சமுகநீதியை பின்பற்றி நடத்தப்படுகிறது. அவர்கள் பெற்ற மதிப்பெண் பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என பிரிவு வாரியாக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

ஒரு கல்லூரியில் மாணவர் பணம் செலுத்தி சேர்ந்த பிறகு, அவருக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் செலுத்தி இருந்த பணத்தை அவர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

கல்விக்கொள்கை

தமிழக கவர்னர் தொடர்ந்து புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து பேசினாலும் மாநில கல்விக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இன்னும் 2 மாதத்தில் மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கை வெளியாகும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 3 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரம் காலாவதியானதாக வந்தது தவறான தகவலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்