சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்

செம்பட்டிவிடுதி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-05-25 18:42 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே சேவுகம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க, அதனை வீரர்கள் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஜல்லிக்கட்டை முத்துராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

616 காளைகள்

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 240 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 616 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

20 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, மிக்சி, குக்கர், கிரைண்டர், ரொக்கம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானவர்கள் வந்து கண்டு களித்தனர். செம்பட்டிவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை (பொறுப்பு) தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்