சேலம் அருகே ஊரைவிட்டு 20 குடும்பத்தினர் தள்ளிவைப்பு-பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு

சேலம் அருகே ஊரைவிட்டு 20 குடும்பத்தினர் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2023-01-23 23:20 GMT

20 குடும்பத்தினர் தள்ளிவைப்பு

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் கபடி வீரர்கள் சிலர் கோப்பைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகாவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

எங்கள் ஊரை சேர்ந்த வீரர்கள் புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற கபடி போட்டிகளில் வெற்றி பெற்றனர். அங்கு பெற்ற கோப்பைகளை ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட சென்றனர். அங்கு வந்த சிலர் 20 குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்திருப்பதாக கூறி அவர்களை வழிபட அனுமதிக்கவில்லை. மேலும் அவர்கள் எங்களை தாக்க முயன்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு உபகரணங்கள்

காடையாம்பட்டி அருகே கூ.குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 85). அவருடைய மனைவி குழந்தையம்மாள் (76). இவர்கள் இருவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில், எனது 3 மகன்கள் கடன் வாங்குவதாக கூறி நாங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துகளை எழுதி வாங்கிவிட்டனர். பின்னர் அவர்கள் தங்களை கவனிப்பதில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி மகன்களிடம் இருந்து சொத்துகளை திரும்ப பெற்று தர வேண்டும். மேலும் மகன்கள் மாதந்தோறும் தங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கவுதமன் மற்றும் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர், பிரபாகரன். மாற்றுத்திறனாளிகளான அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்கள் கூறும் போது, சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான மாற்றுத்திறனாளி போட்டியில் பதக்கம் வென்றுள்ளோம். நாங்கள் தேசிய அளவிலான தகுதி பெற்றுள்ளோம். இந்த போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் புனேவில் நடக்கிறது. அங்கு சென்று வருவதற்கான நிதி உதவி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்