வறட்சியில் வாடும் பயிர்களை காப்பாற்ற அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாய் மூலம் 20 நாட்களுக்கு உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு நனைப்பு
அமராவதி அணை மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பிரதான கால்வாய் மூலம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த பகுதிகளில் பருவமழை கைவிட்டதால் பாசன நீர் பற்றாக்குறையால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப் பயிர்களான தென்னை, வாழை, கரும்பு போன்றவற்றைக் காப்பாற்ற விவசாயிகள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயிர்களைக் காப்பாற்றவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் சிறப்பு நனைப்பு என்ற அடிப்படையில் 20 நாட்களுக்கு உயிர்த் தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலைப்பயிர்கள்
கடும் வறட்சி நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நீர் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நீர்வளத்துறை அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளரிடம் பாசன சபைத்தலைவர்கள் மற்றும் பாசன விவசாயிகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு பருவமழையுடன், அமராவதி அணை மூலம் பெறப்படும் தண்ணீரும் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. நடப்பு ஆண்டில் இந்த பகுதியை பருவமழை முற்றிலுமாக கைவிட்டதால் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட சாகுபடியை விவசாயிகள் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் நிலைப்பயிர்களைக் காப்பாற்ற வழி தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 495 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், நீர் இருப்பு மொத்தமுள்ள 90 அடியில் 62.21 அடியாக உள்ளது.எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் 20 நாட்களுக்கு அணையிலிருந்து பிரதான கால்வாய் மூலம் உயிர் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.