லாரி மோதி 2 வாலிபர்கள் சாவு

சங்கரன்கோவில் அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-09-12 15:59 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

சுகாதார ஆய்வாளர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆகாஷ் (வயது 23). இவர் சுப்புலாபுரத்தில் சுகாதார ஆய்வாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

அதே ஊரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மகேந்திரன் (20). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார்.

லாரி மோதியது

இந்தநிலையில் ஆகாசும், மகேந்திரனும் சொந்த வேலையாக செங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு நேற்று மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

புளியங்குடி சாலையில் ெரயில்வே கேட் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் ஆகாஷ், மகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். ஆகாஷ், மகேந்திரன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

லாரி மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் ராமநாதபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்