பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி; நண்பர் படுகாயம்
தூத்துக்குடியில் நேற்று இரவு அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடியில் நேற்று இரவு அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்து
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4-வது தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் விக்னேஷ் (வயது 17). மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு தனது உறவினரான லாரி டிரைவர் கண்ணன் என்ற மாரிசெல்வம் (29) மற்றும் நண்பர் ஆசிக் (18) ஆகியோருடன் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் முத்தையாபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
திருச்செந்தூர் சாலையில் சத்யா நகர் மேம்பாலத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக நாசரேத்துக்கு சென்ற அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மற்ற 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ஆசிக் பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.