சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
பணம் பறிப்பு
சேலம் எருமாபாளையம் தொங்கு முட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ராசிநகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த களரம்பட்டி வீரவாஞ்சி தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 23), கிச்சிப்பாளையம் காளிகவுண்டர்காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தமிழரசன் (21) ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் கவுதமை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,100-யை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், தமிழரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
போலீசார் விசாரணையில் கைதான அவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொலை, வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கண்ணன், தமிழரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலித்து கண்ணன், தமிழரசன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.