'யூ டியூப்' பார்த்து நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி என்று ‘யூ டியூப்’ பார்த்து நகை பறித்த 2 வாலிபர்கள் முதல் முயற்சியிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-07 21:47 GMT

மாங்காடு,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் கெருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் 4 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இது குறித்து போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் மாங்காடு தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

600 கண்காணிப்பு கேமராக்கள்

கொள்ளையர்களை பிடிக்க சற்று வித்தியாசமாக போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பின்னோக்கி ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்கு முக்கிய காரணம், சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் அதன் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் இரவு நேர காட்சியில் கொள்ளையர்களின் உருவம் சரியாக தெரியாது என்பதால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அதாவது பின்னோக்கு முறையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கெருகம்பாக்கத்தில் இருந்து நொளம்பூர் வரை 600 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கைது

நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்த விஜய் (வயது 29), அவரது நண்பரான நொளம்பூரை சேர்ந்த படகோட்டி தமிழன் (35) ஆகியோரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். நகை பறிப்பு சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பது கடும் சவாலாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

'யூ டியூப்' பார்த்து

இது குறித்து போலீசார் கூறுகையில், இருவரும் போலீசில் சிக்காமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி? போலீசார் எதனை வைத்து எல்லாம் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை எந்த தடயங்களை வைத்து கைது செய்வார்கள் என்று 'யூ டியூப்' பார்த்து அதன் பேரில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பும்போது மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சுற்றி வந்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது உடைகளை மாற்றி கொண்டு கெருகம்பாக்கத்தில் வந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட பிறகு பல்வேறு தெருக்களின் வழியாக சென்று ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி மீண்டும் உடைகளை மாற்றி கொண்டும், மதனந்தபுரம் அருகே சென்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளிலும் மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக சென்றது தெரியவந்தது.

முதல் முறையாக

போலீசாருக்கு சவால் விடும் வகையில் உடைகள் மற்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் மாற்றி கொண்டு சென்றால் போலீசாரிடம் சிக்கி கொள்ள மாட்டோம் என்று 'யூ டியூப்' பார்த்து அதன்படி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அவர்களுக்கு போலீசார் சவால் விடும் வகையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பின்னோக்கி பார்க்கும் முறையை கையாண்டானர்.

இருவரும் 'யூ டியூப்' பார்த்துவிட்டு முதல் முறையாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான பரிதாபமும் அரங்கேறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்