கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

அரியலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து கொண்டு, பகுதி நேரத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர் கஞ்சா விற்பனையால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Update: 2023-10-06 17:41 GMT

ரகசிய தகவல்

தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படுகிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரியலூர் பஸ் நிலைய பகுதிகளில் இரவு நேரத்தில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாகவும், கஞ்சாவை சிறுவர்களும், வாலிபர்களும் அதிக அளவில் வாங்கி செல்வதாக அரியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

திடீர் சோதனை

தகவலின் பேரில் அரியலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அரியலூர் பஸ் நிலையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்றுகெண்டு இருந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அரியலூரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்யும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிப்(வயது 25) மற்றும் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார்(30) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

2 பேர் கைது

இவர்கள் 2 பேரும் கடையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பணி முடிந்தவுடன் பகுதி நேரமாக அரியலூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அரியலூர் நகரப் பகுதி மக்கள் கூறுகையில், அரியலூர் பஸ் நிலைய பகுதியில் இரவு-பகலாக கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்து வருவதாகவும், இதனால் சிறுவர்கள், வாலிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கஞ்சாவிற்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாய சூழ்நிலை உள்ளதாகவும் கூறினர். எனவே இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை அரியலூரில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்