தாசில்தார் அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

தாசில்தார் அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

Update: 2023-02-20 19:47 GMT

நிலமதிப்பு சான்று பெற்று தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நிலமதிப்பு சான்று

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு (வயது45). விவசாயி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது விவசாய நிலத்தில் பைப் புதைக்க, தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டார். அப்போது, வங்கி தரப்பில், நில மதிப்பு சான்று கேட்டனர். இதையடுத்து ராஜவேலு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இந்தநிலையில் நில மதிப்பு சான்றிதழை பெற்றுத்தருவதாக கூறி, தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபநாசம் காப்பான் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (58) என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அரசு பணி செய்வதற்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜவேலு, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

2 ஆண்டுகள் சிறை

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தார். இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரணை செய்து கல்யாணசுந்தரத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் முகமதுஇஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்