மனிதர்கள் மூலம் கழிவுநீரை அகற்றினால் 2 ஆண்டுகள் சிறை: தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் எச்சரிக்கை

தனி நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது நிறுவனமும் எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்த கூடாது.

Update: 2024-06-11 21:06 GMT

சென்னை,

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இதில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் பேசியதாவது:-

தனி நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது நிறுவனமும் எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்த கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2-வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஆஸ்பத்திரிகள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் உரிய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மீறி யாராவது மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண்.14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், பொறியியல் இயக்குநர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், பொது மேலாளர் இரா.ராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர் ஆர்.சிவமுருகன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்