கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் 2 ஆண்டு சிறை தண்டனை

கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2022-06-09 18:52 GMT

கரூர்

குழந்தை திருமணம்

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் குழந்தை திருமணத் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 15 குழந்தை திருமண புகார்கள் பெறப்பட்டு புகார்களின் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற குழந்தை திருமணத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டத்தைசேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 52 வயது ஆணுக்கும் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து குற்றம் செய்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

2 ஆண்டு சிறை தண்டனை

இனி வரும் காலங்களில் கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றால், சிறுமியை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், மற்றும் சிறுமியின் பெற்றோர், திருமணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியாளர், திருமண மண்டப உரிமையாளர், திருமணம் நடத்தி வைத்த புரோகிதர் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை திருமணம் நடத்தி வைக்க ஏதேனும் ஏற்பாடுகள் நடைபெற்றால் அவற்றை உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது 1098 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் 8903331098 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்