சாலையில் வெள்ளை கோடு போடும் எந்திரம் வெடித்து 2 தொழிலாளர்கள் காயம்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் வெள்ளை கோடு போடும் எந்திரம் வெடித்து 2 தொழிலாளர்கள் காயமடைந்தனா்.

Update: 2023-05-13 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை பின்பற்றி வாகனங்கள் செல்லும் வகையில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்து லாரி மூலம் அந்த எந்திரம் எடுத்துச்செல்லப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை ஒரு லாரியில், சாலையில் வெள்ளை கோடு போடும் எந்திரம் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த எந்திரத்தில் வெள்ளைகோடு போடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை போட்டு, கியாஸ் சிலிண்டர் மூலம் சூடேற்றப்பட்டது. இந்த பணியில் கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் ரமேஷ்(வயது 48), பாண்டியன் மகன் சுந்தர் (21) ஆகிய 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, அதிகளவு சூடேறியதால் வெள்ளைகோடு போடும் எந்திரம் வெடித்து, மேல் மூடி தூக்கி வீசப்பட்டது. அடுத்த சில நொடிகளில் அந்த எந்திரம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரமேஷ், சுந்தர் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்