2 தொழிலாளர்கள் பரிதாப சாவு

பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.;

Update: 2023-08-02 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கட்டிட தொழிலாளர்கள்

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே உள்ள திரிபுரசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 58). சாம்பவர்வடகரை தேவளர்சாவடி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (58). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள் ஆவர்.

நேற்று காலையில் 2 பேரும் பாவூர்சத்திரம் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். ேமாட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டினார்.

பஸ் மோதியது

மோட்டார் சைக்கிள் பாவூர்சத்திரம் ஸ்டேட் வங்கி அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, பின்னால் நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சக்திவேல், முருகன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முருகன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

ஆஸ்பத்திரியில் சாவு

தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார், படுகாயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகனும் இறந்தார்.

மேலும் விபத்தில் பலியான சக்திவேல் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

விபத்து குறித்து அறிந்த 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாவூர்சத்திரத்தில் அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்