வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் படுகாயம்

பெரியகுளம், போடி பகுதிகளில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-21 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி புதுப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 60). இவரது மனைவி சரஸ்வதி (52). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சரஸ்வதி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரியகுளத்தை சேர்ந்த கலிபுல்லா (44) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், போடி அருகே உள்ள ராசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்தாமணி (70). நேற்று முன்தினம் இவர், ராசிங்காபுரத்தில் போடி-தேவாரம் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜீப் ஒன்று திடீரென பின்புறமாக வந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிந்தாமணியின் மகள் வெண்ணிலா போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், ஜீப்பை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த வீரபாண்டி (26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்