ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய 2 பெண்கள் கைது

ஜோலார்பேட்டையில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-03 17:38 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கர்நாடக மாநில பெங்களூரு வரை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. உடனே பொது பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் தலா 50 கிலோ கொண்ட 5 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அரிசியைகடத்தி வந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மனைவி வளர்மதி (வயது 53) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மனைவி மகாலட்சுமி (41) என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 2 பெண்களையும் கைது செய்து திருப்பத்தூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்