2 பிளாஸ்டிக் ஆலையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
200 பேர் நோயால் பதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பிளாஸ்டிக் ஆலையை மூடக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் போராட்டம்
கடலூர் அருகே எம்.புதுப்பாளையம் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மனுக்கள் பதியும் இடத்திற்கு அருகில் வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எம்.புதுப்பாளையத்தில் இயங்கி வரும் பிளாஸ்டிக் ஆலையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊரின் மையப்பகுதியில் 2 பிளாஸ்டிக் அரைக்கும் ஆலைகள் இயங்கி வருகிறது. ஒன்று கோவில் அருகிலும், மற்றொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகிலும் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டி அருகில் செயல்படும் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்து தண்ணீரே குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
200 பேர் நோயால் பாதிப்பு
மேலும் இந்த ஆலைகளால் காற்று மாசுபட்டு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. திறந்த வெளியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி ஊராட்சியில் புகார் தெரிவித்தோம். ஊராட்சியிலும் இந்த ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பரபரப்பு
தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற அவர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.