கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகா்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2023-03-14 18:45 GMT

நாகர்கோவில்:

நாகா்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் நேற்று காலையில் இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் டெம்போவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

2 டன் ரேஷன் அரிசி...

இதையடுத்து போலீசார் தங்களது வாகனங்கள் மூலம் டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். உடனே டெம்போவில் இருந்து ஒருவர் இறங்கி தப்பியோட முயன்றார். உடனே துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கீழ சரக்கல்விளையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும், பிடிபட்ட டெம்போவில் கிளீனராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தபோது அதில் சிறு சிறு மூடைகளாக மொத்தம் 2 டன் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

அதைதொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசியை டெம்போவோடு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது52) என்பவரையும், கிளினரான பன்னீர்செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்