டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 5 கி.மீ. தூரம் துரத்திச் சென்று டெம்போவை மடக்கி பிடித்தனர்.

Update: 2023-03-16 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 5 கி.மீ. தூரம் துரத்திச் சென்று டெம்போவை மடக்கி பிடித்தனர்.

அதிகாரிகள் சோதனை

குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் திடீரென வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அணில்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கவுதம் ஆகியோர் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு டெம்போவை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் டெம்போவை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டினார்.

2 டன் ரேஷன் அரிசி

இதை தொடர்ந்து அதிகாரிகள் தங்களது வாகனம் மூலமாக 5 கி.மீ. தூரம் துரத்திச் சென்று டெம்போவை பார்வதிபுரத்தில் மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் டெம்போவில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து டெம்போவை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. பின்னர் டெம்போவுடன் சேர்த்து ரேஷன் அரிசி மூடைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார்? என அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்