வாழப்பாடி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளை

வாழப்பாடி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து தூக்கிச்சென்று கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-21 20:31 GMT

வாழப்பாடி, 

கோவில்களில் கொள்ளை

வாழப்பாடியில் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோவிலுக்கு முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் அங்கிருந்த உண்டியலை கொள்ளை அடித்து சென்று விட்டனர். அந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட மர்ம நபர்கள், உடைக்கப்பட்ட உண்டியலை வாழப்பாடி ஆத்துமேடு காமராஜர் நகர் அருகே வீசி சென்றனர்

இதேபோல் சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலை தூக்கிச்சென்று கொள்ளை அடித்து உள்ளனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி, வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த 2 கோவில்களையும் நேரில் பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் முகமூடி அணிந்து அம்மன் கோவில் உண்டியலை உடைத்து தூக்கிச்சென்ற கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு கோவில்களில் முகமூடி கொள்ளையர்கள் உண்டியலையே தூக்கிச்சென்றது குறித்த தகவல் இந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் கைவரிசை

வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மர்ம நபர்கள் 6 கிராம கோவில்களில் பூட்டை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு உண்டியலை வீசி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் அட்டகாசம் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே கோவிலில் கைவரிசை காட்டும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்