மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி
தோகைமலை அருகே நடந்த வெவ்வேறு மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
வாலிபர் பலி
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கம்பளியாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளியாம்பட்டியில் இருந்து போத்துராவுத்தன்பட்டி நோக்கி சென்று ெகாண்டிருந்தார். அப்போது எதிரே துவரங்குறிச்சி நோக்கி திருவையாறு விளங்குடி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை தோகைமலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மோகன்ராஜின் மனைவி கீதா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் பஸ் டிரைவர் ரவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தோகைமலை அருகே சங்காயிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (27). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருமலைரெட்டியப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வள்ளகுளம் வளைவு பாதையில் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீேழ விழுந்த புகழேந்திக்கு தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகழேந்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து புகழேந்தி மனைவி சரண்யா கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.