இரும்புச்சத்து மாத்திரையை தின்ற 2 மாணவர்கள் மயங்கியதால் பரபரப்பு

ஆலங்குடி அருகே இரும்புச்சத்து மாத்திரையை தின்ற 2 மாணவர்கள் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2023-08-26 19:05 GMT

அரசு தொடக்கப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும், 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், இதே கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் முருகேசன் மகன் கார்த்திகேயன் (வயது 10), செல்வம் மகன் மோகன்ராஜ் (10) ஆகியோர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.

அப்போது 2 மாணவர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இரும்புச்சத்து மாத்திரை

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் 2 பேரையும் கொத்தமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 2 மாணவர்களும் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் நேற்று இரவு வீடு திரும்பினர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொத்தமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து வாரம் ஒருமுறை செவிலியர்கள் மூலம் இரும்புச்சத்து மாத்திரை வழங்குவது வழக்கம். இந்தநிலையில் பள்ளியில் வைத்திருந்த இரும்புச்சத்து மாத்திரைகளை 2 மாணவர்களும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் சாப்பிட்டதாக கூறினர். இதனால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்