கிணற்றுக்குள் பதுங்கி இருந்த 2 பாம்புகள்
வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் பதுங்கி இருந்த 2 பாம்புகளை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 40). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழம் கிணறு ஒன்று உள்ளது. அதில் தண்ணீர் 40 அடி இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வமுருகன் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்து கிணற்றுக்குள் 2 பாம்புகள் பதுங்கி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிணற்றுக்குள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். அதன்பிறகு பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி 2 பாம்புகளை பிடித்தனர். அவை சுமார் 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு, 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்தது. அந்த பாம்புகளை, வேடசந்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர்.