மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடையுள்ள 2 சுறா மீன்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள 2 சுறா மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.

Update: 2022-07-01 21:24 GMT

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வலையில் 500 கிலோ எடையுள்ள 2 சுறா மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.

தடைகாலம் முடிந்தது

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 2 மாதங்களாக மீன்பிடி தடை காலம் அமலில் இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறைந்த அளவிலான விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

இவர்களும் கடலுக்குள் சூறாவளி காற்று வீசியதால் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.

சுறா மீன்கள்

இதில் ஒரு படகில் இருந்த மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட ஒரு சுறா மீனும், 200 கிலோ எடை கொண்ட இன்னொரு சுறா மீனும் சிக்கியிருந்தன.

அந்த சுறா மீன்களை, மீனவர்கள் ராட்சத கிரேன் மூலம் படகில் இருந்து இறக்கி ஏலக்கூடத்திற்கு எடுத்து சென்று ஏலமிட்டனர். அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ.60 ஆயிரத்துக்கும், 200 கிலோ எடை கொண்ட மீன் ரூ.50 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

பின்னர் அந்த மீன்களை கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைத்து எடுத்து சென்றனர்.

மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு இப்போதுதான் இவ்வளவு பெரிய மீன் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்