போத்தனூர்
கோவை சுந்தராபுரம் பகுதியில் 2 சந்தனமரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச்சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்
கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி சுற்று வட்டார பகுதிகளில் தானாக சந்தன மரங்கள் பல வீடுகளில் வளர்ந்துள்ளது. இந்த சந்தன மரங்களை மர்ம கும்பல் அவற்றை நோட்டமிட்டு, அவற்றை வெட்டி கடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தராபுரம் சிட்கோ வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த மணி என்பவரது வீட்டின் வளாகத்தில், தானாக வளர்ந்து இருந்த சுமார் 10 ஆண்டுகளான 2 சந்தன மரங்களை மர்ம நபர்கள் மின்வாளால் அறுத்தும், வெட்டியும் கடத்தி சென்றனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து மணி சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களில் 5 இடங்களில் சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.