சென்னை அருகே போலீசார் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை... அதிரவைக்கும் பின்னணி...!

சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2023-08-01 05:15 GMT

சென்னை,

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்த போலீசார் முற்பட்டனர். ஆனால், அந்த கார் நிற்காமல் போலீஸ் வாகனம் மீது மோதியது. பின்னர், காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில், சப்-இன்ஸ்பெக்டர் இடது கையில் வெட்டு விழுந்தது. மேலும், சப்-இன்ஸ்பெக்டரின் தலையில் வெட்ட முற்பட்டனர். ஆனால் அதிஷ்டவசமாக சப் - இன்ஸ்பெக்டர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டு விழுந்தது. இதை பார்த்த இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக தாக்குதல் நடத்திய நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். மேலும், சப்-இன்ஸ்பெக்டரும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர். எஞ்சிய 2 பேர் ஆயுதங்களுடன் தப்பியோடினர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காயமடைந்த இருவரும் பிரபல ரவுடிகளான சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 2 ரவுடிகளும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார்.

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சோட்டா வினோத் (வயது 35) ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் என 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட மற்றொரு ரவுடி ரமேஷ்சும் ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறிமுதல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில்,

தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அதி வேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்டபோது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது.  அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.

அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்டபோது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.

மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத். வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை. 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஷ், வயது 32. த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு.சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்