மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் சாவு

சேலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தான். 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-01 20:00 GMT

சேலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தான். 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

பிளஸ்-2 மாணவன்

சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் வின்சென்ட். நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மகன் சச்சின் (வயது 17). இவன், தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரிகரசுதன் (16), அஜய்குமார் (18). இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள்.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே நடந்து வரும் அரசு பொருட்காட்சியை பார்ப்பதற்காக 3 பேரும் நேற்று முன்தினம் சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். வண்டியை சச்சின் ஓட்டியுள்ளார்.

பரிதாப சாவு

அப்போது அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சச்சின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் விரைந்து சென்று பலியான சச்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்