போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 2 கைதிகள் சேலம் சிறையில் உண்ணாவிரதம்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களான 2 கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வில்சன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி நள்ளிரவு பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 32), தவுபிக் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது 2 பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் பல்வேறு சதிச்செயல்களில் ஈடுபட இருந்ததும் தெரிந்தது.
தேசிய பாதுகாப்பு சட்டம்
இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் 2 பேரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இருவரும் மற்ற கைதிகளுடன் பேச அனுமதிக்க வேண்டும். நடைபயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியபடி நேற்று முன்தினம் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு உள்ளனர்.
இது குறித்து ஜெயில் அதிகாரிகள் கூறும் போது, '2 பேரும் முறையாக மனு அளிக்காமல் சிறை போலீசாரை மிரட்டுகின்றனர். அவர்கள் 2 பேரும் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டுக்கொண்டு தான் இருந்தனர். உண்ணாவிரதம் இருப்பதாக பொய் கூறுகின்றனர்' என்றார்கள்.