இரணியல் அருகே சிறுமியிடம் 2 பவுன் நகை பறிப்பு
இரணியல் அருகே சிறுமியிடம் 2 பவுன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே சிறுமியிடம் 2 பவுன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமி
இரணியல் போலீஸ் சரகம் கண்டன்விளை அருகே உள்ள சடையமங்கலம் இறுங்கன்விளாகத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43), கூலி தொழிலாளி. இவருடைய 13 வயது மகள் நேற்று முன்தினம் காலையில் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு பால் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியின் அருகே வாகனத்தை நிறுத்தினார். தொடர்ந்து சிறுமியிடம் 'தக்கலைக்கு எந்த வழியாக செல்ல வேண்டும்' என வழி கேட்டார்.
2 பவுன் நகை பறிப்பு
அப்போது சிறுமி வழி சொல்லி கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டு அழுதார். உடனே மர்ம நபர், 'சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன்' என மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மணிகண்டன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.