மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கோவக்குளத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி செல்லம்(வயது 62). இவர் நேற்று அதிகாலை எழுந்து தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென செல்லத்தின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்தவருடன் தப்பிச்சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லம் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்ப்பதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர். எனவே இதுகுறித்து செல்லம் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.