கல்லூரி பேராசிரியையிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி பேராசிரியையிடம் 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-08-08 18:41 GMT

கள்ளக்குறிச்சி

உதவி பேராசிரியை

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் மனைவி சோனியா(வயது 34). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று மாலை வகுப்பு முடிந்ததும் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அண்ணாநகர் மேம்பாலம் அருகில் வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் சோனியாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துசென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று மதியம் கூத்தக்குடியில் உள்ள தற்காலிக சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை தாலுகா திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரகாஷ்(வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் பேராசிரியை சோனியாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதும், எறஞ்சி கிராமத்தை சேர்ந்த வேலு மனைவியும், வங்கி தொடர்பு அதிகாரியுமான உமாமகேஸ்வரியிடம் முகவரி கேட்பதுபோல் அவரை பின்தொடர்ந்து சென்று தங்க சங்கிலியை பறிக்க முயன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கைது

இதையடுத்து பிரகாஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்