பாதயாத்திரை பக்தர்கள் 2 பேர் பலி

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரமாக வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-12-28 19:00 GMT

சாத்தூர்,

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரமாக வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பக்தர்கள் மீது மோதிய வாகனம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். இவர்கள் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சாத்தூர் அருகே புல்வாய்பட்டி விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது46), மீனாட்சி காலனியை சேர்ந்த சங்கரன் (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆமத்தூரை சேர்ந்த ஜெயராஜ் (46) படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை பார்த்து, மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

தகவல் அறிந்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த ஜெயராஜ், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேர் பலிக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படு்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்