உள்ளாடைகளில் மறைத்து ரூ.2½ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவைக்கு உள்ளாடைகளில் மறைத்து ரூ.2½ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவைக்கு உள்ளாடைகளில் மறைத்து ரூ.2½ கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சிங்கப்பூர், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக கோவை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் வந்தனர். இதில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.2½ கோடி தங்கம் கடத்தல்
இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிர சோதனை நடத்தினர். இதில் 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட் டது. உடனே அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
இதில் அவர்கள் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் 3 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.2½ கோடி மதிப்பிலான 4.1 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இந்த தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த ஜாபர் அலி (வயது 50), சாகுல் ஹமீது (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றொரு பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட வில்லை.
இது குறித்து மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த 3 பயணிகள் தங்களது உள்ளாடைகளில் 4.1 கிலோ தங்கத்தை கட்டியாகவும், ஆபரணங்களாகவும் கடத்தி வந்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு பயணி ரூ.50 லட்சத்திற்கும் கீழ் தங்கம் கடத்தி வந்ததால் கைது செய்யப்படவில்லை என்றனர்.