மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி; சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி சிக்கி பரிதாபம்

சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கி 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகினர்.

Update: 2023-10-07 07:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48), மர வியாபாரி. அதேபோல பூவலம்பேடு திடீர் நகரை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ரவணைய்யா (38). இவர்கள் இரண்டு பேரும் தொழில் சம்பந்தமாக சின்ன புலியூர் அருகே காட்டு வழியாக மோட்டார் சைக்கிளில் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவணைய்யா ஓட்டி சென்றார்.

அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து சாலையில் ஏற்கனவே விழுந்து கிடந்தது. அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதி இருட்டாக காணப்பட்டது. சாலையில் கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை ரவனைய்யா கவனிக்கவில்லை.

மோட்டார் சைக்கிளில் மின்கம்பி சிக்கி கண் இமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் ரவணைய்யா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமேஷை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது தெரிய வந்தது.

சின்னபுலியூரைச் சேர்ந்த மர வியாபாரி ரமேஷின் மனைவி லதா, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகள் காயத்ரியையும் (24), மகன் டில்லிபாபுவையும் ரமேஷ் தனியாக வளர்த்து வந்தார். மற்றொரு திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள் வற்புறுத்தியும் ரமேஷ் அதனை ஏற்கவில்லை.

பூவலம்பேடு திடீர் நகரைச்சேர்ந்த தொழிலாளி ரவணைய்யா மனைவி புவனேஸ்வரி (33). இவர்களுக்கு மோனிகா (18) என்ற மகளும், மோகன் (14) என்ற மகனும் உள்ளனர். அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தான் ராவணைய்யா தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். குடும்ப வறுமை காரணமாக மகள் மோனிகா தனது படிப்பை பாதியில் நிறுத்தி கொண்டார். மகன் மோகன் மட்டும் தற்போது அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மின் வாரியத்தின் கவனகுறைவால் நடந்த இந்த விபத்தால் குடும்பமே தற்போது நிலைகுலைந்து போய் விட்டது என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்