மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது - 12 வாகனங்கள் பறிமுதல்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அங்குள்ள பகுதியில் வண்டியை நிறுத்தி செல்வது வழக்கம். அவ்வாறு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. ஒவ்வொரு வாரமும் 3 முதல் 5 வண்டிகள் வரை திருடப்பட்டு வந்தன. எனவே இந்த மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோட்டார்சைக்கிள் திருடப்படும் பகுதி மற்றும் அரசு ஆஸ்பத்திரி சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
2 பேர் கைது
அப்போது ஒருவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஒரு சில குறிப்பிட்ட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வது தெரியவந்தது. உடனே அந்த பகுதியில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். சம்பவத்தன்று திருட வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் ஒத்தக்கடை, வளர்நகரை சேர்ந்த கார்த்திக்(வயது 35) என்பதும், இவர் மோட்டார் சைக்கிள்களை திருடி யாகப்பநகர் பாண்டியராஜன்(33) என்பவரிடம் கொடுப்பதும், அவர் அந்த வண்டியின் தரத்தை பொறுத்து விற்பனை செய்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை பெற்று கொண்டு இருவரும் பிரித்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு பிடித்த தனிப்படையிரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.