பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
திருப்பூர் பெரியார்காலனியில் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து கைவரிசையை காட்டி உள்ளனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் பெரியார்காலனியில் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து கைவரிசையை காட்டி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
திருப்பூர் பெரியார்காலனி 8-வது வீதியை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி ருக்குமணி (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி வந்து திடீரென ருக்குமணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ருக்குமணி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.
இதையடுத்து அந்த ஆசாமி ஏற்கனவே மோட்டார்சைக்கிளில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், நல்லூர் சரக உதவி கமிஷனர் தலைமையில் அனுப்பர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணை
பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் சம்பவம் நடந்த இடத்தின் எதிரே உள்ள கடை முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி பொருள் வாங்குவது போல நின்று நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அந்த ஆசாமிகள் சங்கிலியை பறித்து பெரியார்காலனி வரவேற்பு வளைவு வழியாக திருப்பூர் நோக்கி செல்வது பதிவாகி உள்ளது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண்ணிடம் துணிகரமாக சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----------